சிடிஎஸ் வங்கிக் கணக்குகளை முடக்கியது வருமான வரித் துறை: ரூ.2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு!

Published:

congnizent - 2026

சென்னை: ரூ.2,500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சிடிஎஸ் (காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்) நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் இணைய தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் தொடங்கி இணைய தொழில்நுட்ப வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிடிஎஸ்., கடந்த 2016-17-ஆம் நிதியாண்டிற்கான வருமானத்தைக் குறைவாகக் காட்டி, ரூ.2,500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அந் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதை அடுத்து, அதை கண்காணித்த வருமான வரித்துறை, வரி ஏய்ப்பு குறித்து நோட்டீஸ் அளித்தது.

ஆனால், வருமான வரித் துறை நோட்டீஸுக்கு முறையான விளக்கம் அளிக்காததால் காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை, மும்பையில் உள்ள கிளைகளின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கியுள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதுகுறித்து சிடிஎஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், எல்லா வரியையும் முறையாக கட்டியுள்ளோம். வருமான வரித் துறை சட்டத்தை மீறிச் செயல்படுகிறது. வருமான வரித்துறை நடவடிக்கைகள், எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழில் நிறுவனங்களிடையே பாதிப்பை ஏற்படுத்தாது என்று விளக்கம் அளித்தது. இதனிடையே வழக்கு விசாரணை முடியும் வரை மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img