ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், பதக்கப்பட்டியலில் இன்று காலை நிலவரப்படி இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 31 தங்கத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 19 தங்கத்துடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 8 தங்கத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
முன்னதாக நேற்று பளு தூக்குதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.
கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நான்காம் நாளான நேற்று மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் உ.பி., வாரணாசியைச் சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 16 வயது மனு பாக்கெர் தங்கப் பதக்கத்தையும், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஹீனா சித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
உ.பி., மீரட்டைச் சேர்ந்த ரவிக்குமார், ஆடவருக்கான 10 மீட்டர் ரைஃபிள் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார்.
பளுதூக்கும் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் வெள்ளி பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் 105 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் பர்தீப் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்கள் துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ஜித்து ராய் தங்கம் வென்றார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில் ஓம் மிதர்வால் வெண்கலம் வென்றார்.
5ம் நாளான இன்று காலை மொத்தம் இந்தியா 8 தங்கம்,4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியா வென்ற பதக்கங்கள்
பெயர் பதக்கம் விளையாட்டு
மனு பாக்கெர் தங்கம் மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல்
சதீஷ் குமார் தங்கம் ஆடவர் – பளு தூக்குதல்
வெங்கட் ராகுல் ரகாலா தங்கம் ஆடவர் – பளு தூக்குதல்
சானு சைக்கம் மீராபாய் தங்கம் மகளிர் – பளு தூக்குதல்
சஞ்சிதா சானு குமுக்சம் தங்கம் மகளிர் – பளு தூக்குதல்
பூனம் யாதவ் தங்கம் மகளிர் – பளு தூக்குதல்
ஹீனா சித்து வெள்ளி மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல்
ரவிக்குமார் வெண்கலம் ஆடவர் 10 மீ. ஏர் ரைஃபிள்
குரு ராஜா வெள்ளி ஆடவர் பளு தூக்குதல்
தீபக்லேதர் வெண்கலம் ஆடவர் பளுதூக்குதல்
விகாஸ் தாக்கூர் வெண்கலம் ஆடவர் பளு தூக்குதல்