சென்னை: காவிரியை வைத்து அரசியல் செய்பவர்களால் நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வாங்கித் தர முடியாது என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகர் சிம்பு.
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மௌனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். காலை தொடங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நடிகர் சிம்பு, அவரது தந்தை டி. ராஜேந்தர் உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ளவில்லை. இதை சர்ச்சையாக்கினர் சிலர்.
இந்நிலையில் அதற்கு சிம்பு விளக்கம் அளித்து வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் ”மௌன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சினிமா பிரச்சனைகளுக்கே தீர்வு காணவில்லை அதற்குள் நடிகர்கள் காவிரி பிரச்சனைக்கு களமிறங்கிவிட்டார்கள்.
”காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் யாரும் நமக்கு தண்ணீர் வாங்கி கொடுக்க மாட்டார்கள்.
”காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்ய கூடாது. இப்போதுதான் சென்னை அணி மீண்டும் வந்துள்ளது. ஆனால் சென்னை அணி வீரர்கள் நமக்கு ஆதரவு அளிக்கலாம். தோனி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடலாம். இல்லையென்றால் தமிழர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . மீதி விஷயத்தை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்”
தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும்”
இப்படி அந்தக் காணொளியில் சிம்பு கூறியுள்ளார்.]




