
நாமக்கல்: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் மருத்துவமனையில் இருந்தனர் என்று, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ராமமோகன ராவ் விவகாரம் தொடர்பில் உண்மை நிலை என்ன என்பது குறித்து நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த தங்கமணி, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நான் நாமக்கல்லிலும், அமைச்சர் வேலுமணி திருவனந்தபுரத்திலும் இருந்தார்.
யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் எங்களையும் உள்ளே இழுத்து எங்கள் மீது புகார் கூறியுள்ளார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. உயரதிகாரி பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொய்யான தகவல்களைக் கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மறைந்தவுடன் இதனை அப்போதே அவர் ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.



