சிறப்பான ஒத்துழைப்பு: அரசு, முதல்வர், கல்லூரி இளைஞர்களுக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி!

பாதுகாப்புத் துறையின் மூலம் நடத்தப் பட்ட இந்தக் கண்காட்சி பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. ஒரு சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டி, கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி, பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய போதும், அவற்றைப் புறம் தள்ளி பொதுமக்கள் பெருமளவில் குவிந்து இந்தக் கண்காட்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

புது தில்லி: சென்னை அருகே திருவிடந்தையில் நடைபெற்ற இந்திய ராணுவத் தளவாடக் கண்காட்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு கொடுத்த தமிழக அரசுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை 4 நாள்கள் ராணுவ தளவாடக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக அரசுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்லூரி இளைஞர்கள் பலர் தன்னர்வலர்களாகக் குவிந்து மக்கள் சேவை ஆற்றினர். அவர்களுக்கும் தனது நன்றி என்று கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

இந்தக் கண்காட்சியை ஞாயிறு அன்று பொதுமக்கள் மூன்றரை லட்சம் பேர் பார்வையிட்டனர். கப்பல் தளத்தையும் ஆயிரக்கணக்கான பேர் முன் பதிவு செய்து பார்வையிட்டனர். பாதுகாப்புத் துறையின் மூலம் நடத்தப் பட்ட இந்தக் கண்காட்சி பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. ஒரு சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டி, கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி, பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய போதும், அவற்றைப் புறம் தள்ளி பொதுமக்கள் பெருமளவில் குவிந்து இந்தக் கண்காட்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.