
புது தில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வர குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டன தீர்மானம் பழிவாக்கும் நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: ஒரு நீதிபதியை பயமுறுத்தி, அதன் மூலம் மற்ற நீதிபதிகளுக்கு ஒரு செய்தி அனுப்பும் நோக்கத்தில், தலைமை நீதிபதிக்கு எதிராக பழிவாங்கும் நோக்கத்தில் கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இந்தத் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்காக, காங்கிரஸ், அதன் நண்பர்களின் கூட்டு முயற்சி. இது ஒரு மோசமான செயல். அரசியல் மட்டத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் தவறான பிரசாரங்களை மேற்கொண்ட எதிர்க் கட்சியினரின் சதிச்செயலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிக் கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிய மறுவிசாரணை கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் எழுந்த அதிருப்தியினால் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, 4 நீதிபதிகள் போர்க் கொடி தூக்கியதைத் தொடர்ந்து, அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால், தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிராக 7 எதிர்க்கட்சிகள், கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் மனு அளித்தனர்.
முன்னதாக குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி தலைவர்களுடன் தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர். இந்தத் தீர்மானம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில், தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரும் மனு மீது 71 எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர். இதனை வெங்கய்யாவிடம் அளித்துள்ளோம். தீர்மானம் கொண்டு வருவதற்குத் தேவையான ஆதரவு உள்ளது என அவரிடம் கூறியுள்ளோம். இதனை ஏற்பதும், நிராகரிப்பதும் அவரின் முடிவு. நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், இந்த நாள் மீண்டும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறோம். நீதித்துறை சுதந்திரம் முக்கியமானது. நீதிபதிகள், நீதித் துறையின் மாண்பை நிலை நிறுத்த வேண்டும். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதே, சில வழக்குகளை எவ்வாறு கையாளப் போகிறார் என்பது குறித்த கேள்விகள் எழுந்தன. ஜனநாயகத்தைக் காக்கவே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைக்காகவும் கொண்டு வரப்படுகிறது என்று கூறினார்.
கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட 100 மக்களவை மற்றும் 50 மாநிலங்களவை எம்.பி.,க்கள் கையெழுத்து போட வேண்டும். இதனை அவைத் தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
அவைத்தலைவரால் இத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். விசாரணையில் நீதிபதி தவறு செய்திருந்தால் நிருபிக்கப்பட்டால், தீர்மானம் கொண்டு வரப்படும். 3 ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தால் நீதிபதி பதவி பறிக்கப்படும்.

இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் கூறியபடி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் இயங்கி வந்த நீதித் துறையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை நீர்த்துப் போகச் செய்து, ஆதரவாக இயங்கிய நிலையில், தீபக் மிஸ்ரா காங்கிரஸ் லாபிக்கு கட்டுப் படாமல் தன்னிச்சையாக இயங்கினார் என்று கூறப் படுகிறது. இதனால் 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதும், நெறிமுறைகளுக்கு மாறாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்ததும், பின்னர் நீதிபதியுடன் சுமுகமாக தீர்க்கப்பட்டதும் கடந்த கால நிகழ்வுகள்.
தங்களின் நெருக்குதல்களுக்கும் தாங்கள் விரும்பிய வகையிலும் செயல்படாத நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாங்கள் ஆட்சியில் இல்லாத நிலையிலும் அதிகாரத்தை செலுத்த எதிர்க்கட்சிகள் கண்டனத் தீர்மானம் என்ற மிரட்டல் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



