புது தில்லி: உலக அளவில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு, உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களே காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் கூறியுள்ளார்.
தில்லியில் உள்ள ஜாமியாமிலியா இஸ்லாமியா பல்கலை.,யில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவுச் சொற்பொழிவுக் கூட்டத்தில் பேசியபோது, அமிதாப் கந்த் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின்தங்கி வருகின்றன. பீஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்கள், உலகளவில் சமூக முன்னேற்ற விஷயத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.
தொழில்கள் முன்னேற்றம் இருந்தாலும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டுப் பட்டியலில் பின்தங்கிய நிலையிலேயே நாம் உள்ளோம். இந்தப் பட்டியலில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதில் 131வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கல்வி, சுகாதாரத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.
மாணவர்களின் கற்றல் திறன் மிக மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு பயிலும் மாணவனால், இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்கக் கூட முடியவில்லை. அடுத்து, குழந்தைகள் இறப்பு விகிதம். இதுவும் மிக அதிகம். நாம் இந்தத் துறைகளில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது… என்று கூறினார் அவர்.