
எத்தனையோ அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, தமிழகத்தில் திடீரென ஒரு பரபரப்பு நேற்று தொற்றிக் கொண்டது. அது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான Dr. நமது அம்மாவில் வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்தானது.
அதிமுகவும் பாஜக.,வும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டன. இந்திய அரசியலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்படுவதற்கான பாதைகள் வகுக்கப்பட்டுவிட்டன. பயணத் திட்டத்தை கட்சியின் தலைமை முடிவு செய்யும். – என்று ஒரு கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் தகவல்கள்தான், அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தக் கட்டுரையை எழுதியவர் தனிப்பட்ட ஒரு கட்டுரையாளர். ஆனால் பிரசுரிக்கப்பட்டது டாக்டர் நமது அம்மாவில்! இதுதான் பிரச்னைக்கு முக்கியக் காரணம்.
இந்த விவகாரம் எழுந்ததும், வழக்கம் போல் வீட்டை விட்டுக் கிளம்பியதும் ஊடகங்களின் மைக் முன் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு விளக்கத்தை அளித்தார். ஆனால், தமிழகத்தின் கோயபல்ஸ் வாரிசான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை பல விதங்களில் அடுக்கிக் கொண்டே போய், விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், இந்த இரட்டைச் சொற்களால் எழுந்த சர்ச்சைகளை அடுத்து, இரட்டை குழல் துப்பாக்கி கட்டுரை விவகாரத்தை மிகவும் உணர்வு பூர்வமான பிரச்னையாக எடுத்துக் கொண்ட கட்சி மேலிடம், நமது அம்மா நாளிதழில் இருந்து 2 பேரை பணி நீக்கம் செய்தது.
அ.தி.மு.க வின் அதிகார பூர்வ நாளேடான “நமது அம்மா’வில் பி.ஜே.பி.யும் அண்ணா தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்ற கட்டுரை எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த திருமலை என்ற நிருபரையும், பன்னீர் செல்வம் என்ற உதவி ஆசிரியரையும் நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. ஆசிரியருக்கு தெரியாமல் கட்டுரையை எழுதி பிரசுரித்ததற்காக இருவரும் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
பொதுவாக, கட்சி ஊடகங்கள் என்றாலே, பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்காதுதான்! கட்சிக்கான அதிகாரபூர்வ ஊடகம் என்ற வகையில், அரசியல் சதுரங்க விளையாட்டுகளுக்கு உடன்பட்டுத்தான் போயாக வேண்டும். இதுதான் ஊடகவியலாளருக்கு உரிய சுதந்திரம் என்பதை உணர்ந்து கொண்டுதான், ஒரு அரசியல் கட்சி இதழில், ஊடகங்களில் பணி செய்ய இயலும்.
ஜெயா டிவி.,யிலும் இது போல் பல நெருக்கடிகள் பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்துள்ளன. கையாளப்படும் ஒவ்வொரு வார்த்தையும் கூட கவனிக்கப்படும். இருப்பினும், அதிமுக., பாஜக. நெருங்கி வருகிறது எனக் கருதப் படும் இந்தக் கருத்தில் அப்படி என்ன தவறு நேர்ந்துவிட்டது?
ஏற்கெனவே முதல்வர் எடப்பாடியார், பிரதமர் மோடியின் கையாள், அடிமை என்றெல்லாம் தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படி ஒரு கருத்து, நிச்சயம் பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. இப்போது தேர்தல் கால அவசர நிலையும் இல்லை. அப்படி இருக்க இத்தகைய கருத்துகள் எழுவதை அதிமுக., தலைமை விரும்பாதுதான்!

இருப்பினும் இந்தக் கருத்து தவறானதல்ல, என்று கூறி இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வை அசை போடுகிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.
அவர் கூறுபவை… அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் இனி கூட்டணி சேரவே முடியாது என்ற அரசியல் நிலை தான் 1996ல் இருந்தது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சில மாதங்கள் முன்பாக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா நடத்திய வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்டார்.
பிரதமர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியை ஆளுநர் புறக்கணித்தார். அதிமுகவின் அன்றைய அதிகாரப்பூர்வ நாளேடு டாக்டர் நமது எம்.ஜி.ஆர். பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கம் ஆசிரியர்.
திடீரென்று மத்திய – மாநில ஒற்றுமை பற்றியும் காங்கிரஸ் கூட்டணி பற்றியும் நமது எம்.ஜி.ஆரில் பெட்டிச் செய்திகள் வரத் தொடங்கின. அடுத்த சில மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவை எதிர்த்து வந்த ஆளுநர் சென்னாரெட்டிக்கு ஷாக் அடிக்கும் விதமாக காங்கிரஸ் – அதிமுக கூட்டணி உருவானது.
இன்றும் கவர்னர் முதல் காவிரி வரை – வரலாறு அப்படியே திரும்பி உள்ளது.
மத்திய -மாநில உறவு பற்றியும், மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி பற்றியும் ஆளும் அதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளேட்டில் கட்டுரை வெளியிடப்படுகிறது – மறுக்கப்படுகிறது.
1996ல் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்தது. அதே போன்ற உடைப்பு நிகழ தமிழக பாரதிய ஜனதாவில் வழி இல்லை. ஆனால் ஆளும் அதிமுக உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் அவசர மறுப்பு அறிக்கைகள் – பத்திரிகை பொறுப்பாசிரியர் மற்றும் கட்டுரையாளர் அதிரடி நீக்கங்கள்!
இன்னும்கூட ஒரு விநோத்மான ஒற்றுமை உள்ளது. 1995வாக்கில் ஜெயலலிதாவை கன்னி மேரி உருவத்தில் அதிமுகவினர் சித்தரித்துப் போஸ்டர் ஒட்டினார்கள். அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கன்னி மேரிக்கு பாவம் நீக்கும் பிரார்த்தனைகள் நடந்தன.
இன்றைக்கு அதையும் தாண்டி ஒரு படி போய் விட்டது தமிழக அரசின் விளம்பரப் படம் ஒன்று. திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் அவரது தோழி மற்றும் உறவினருடன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை நடத்தச் சொல்கிறார். “யாருடைய பெயரில் அர்ச்சனை?” என்று “சாமி பெயருக்கு செய்யுங்கள்!” என்கிறார்.
“எந்த சாமி பெயருக்கு?” என்று அர்ச்சகர் கேட்க,. “நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பெயருக்கு! அவர் தான் எனக்கு வேலை கொடுத்த சாமி!” என்று அந்த மாற்றுத்திறனாளி கூறுகிறார்.
அடுத்த விநாடி திருப்பதி வெங்கடாஜலபதி சிலையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தோன்றி மறைகிறார். ஆக, கன்னி மேரி முதல் கவர்னர் வரை – காவிரி முதல் கடவுள் வரை அதிமுக அரசியலில் 1996 க்கும் 2018க்கும் இடையில் பல ஒற்றுமைகள் தெரிகின்றன
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் – என்ற எம்.ஜி.ஆர். படப்பாடல் வரிகள் அதிமுக அரசியலுக்கு அப்படியே பொருந்தும் என்பதே என் எண்ணம்.
தேர்தல் மேகம் சூழ்ந்து நிற்கும்போது மத்திய அரசின் படைபலம் தேவைப்படும். எனவே பாரதிய ஜனதா – அதிமுக உறவு மலர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை -என்கிறார் பத்திரிகையாளர் ’தராசு’ ஷ்யாம்.
எனவே கூட்டணி குறித்த இந்தப் பேச்சு தற்போதைய காலத்துக்கு ரசிக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்துக்கான அச்சாணியாகவே இந்த அச்சுச் சொற்கள் திகழ்வதை நாம் மறுக்க இயலாது.



