புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், ஒரு வரைவு திட்டத்தை மே 3ஆம் தேதியான இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசோ, குறித்த காலத்துக்குள் அதனை தயார் செய்ய இயலவில்லை என்று கூறி, மேலும் கால அவகாசம் கேட்டது.
இதனால் கோபம் அடைந்த தமிழக விவசாயிகள் சிலர் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே உள்ள மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, காவிரி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் வேண்டும் என்றும், கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்க முடியாது என்றும், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனிடையே காவேரி வழக்கு அடுத்து வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டதுடன், ஏப்ரல், மே காலங்களுக்கு உரிய வகையில் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்தது.





