போக்ரான்-2 அணு சோதனை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நாள் இந்திய வரலாற்றில் சிறப்பு நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்திய தொழில்நுட்ப தினம் என்று சிறப்பு பெற்றுள்ளது இந்த நாள். அன்றைய பிரதமர் வாஜ்பேயி மன தைரியத்துடன் இந்த நாளை சாதித்துக் காட்டினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 1998ல் இதே மே 11ம் நாளில், ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப் பகுதியி்ல் அணு குண்டு சோதனையை நடத்திக் காட்டினார். அப்போதைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் தலைமையிலான குழு இதனை மிகக் கச்சிதமாக நடத்தியது.
மே 11, மே 13 என இரு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒன்று ‘தெர்மோ நியூக்ளியர் பாம்’ எனப்படும் ‘ஹைட்ரஜன் குண்டு’. Nuclear fusion எனப்படும் அணுக்கள் இணைவுச் சோதனை ஒன்றும், Nuclear fission எனப்படும் அணுப் பிளவுச் சோதனை 4ம் என மொத்தம் ஐந்து சோதனைகள்.
கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதன்பின், 1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்திக் காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாஜ்பேயி தலைமையில் நடத்திய போக்ரான் அணுகுண்டு சோதனை மூலம், இந்தியாவின் சக்தியை உலகம் அறிந்து கொண்டது. விஞ்ஞானிகள் இந்த நாட்டை பெருமைப்படுத்தினர். அணுகுண்டு சோதனை நடத்தியவுடன், இந்தியா மீது மற்ற நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அதை கண்டு வாஜ்பேயி பயப்படவில்லை. தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தார். அப்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால், நிச்சயம் பொருளாதார தடையால் தயங்கியிருப்பார்கள், பயந்திருப்பார்கள். ஆனால், வாஜ்பேயி வித்தியாசமானவர். தனது துணிச்சலை காட்டினார்.
இந்த அணு சோதனை நடந்த பின்னர் வந்த புகைப்படம் ஒன்று மிகவும் பிரபலமானது. அடல் பிஹாரி வாஜ்பேயி, அப்துல் கலாம், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் என மூவரும் இந்தியாவின் புகழை, ஒற்றுமையை, நல்லிணக்கத்தைப் பறை சாற்றுவது போல் நின்று போஸ் கொடுத்தனர்.




