கேரளாவின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டார் பிரதமர் மோடி என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு பினராயி விஜயன் உட்பட 22 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினர்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், கேரளாவில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய குழுவை அனுப்பி சேத விவரங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப நிவாரண நிதி ஒதுக்கும்படி கோரினோம். அதை ஏற்று மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறினார் என்றும், கேரளாவுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதை பிரதமர் ஏற்கவில்லை என கூறினார்.
மேலும் கேரளாவின் பல கோரிக்கைகளை பிரதமர் நிராகரித்து விட்டதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்நிலையில் பிரதமரை சந்தித்ததால் எந்தப் பலனும் இல்லை. அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி இல்லை என அவர் தெரிவித்தார்.



