கர்நாடக மாநிலம், சிக்கோடியில் இன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார்.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதால், பிரதமர் மோடியின் பிரசாரத்தை கர்நாடகத்தில் தீவிரப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதன் முதல்முயற்சியாக, வட கர்நாடகத்தின் சிக்கோடியில் இன்று விவசாயிகள் மாநாட்டை பாஜக நடத்துகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதில் ஒரு லட்சம் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறினார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கர்நாடகத்துக்கு அடிக்கடி வரவிருக்கிறார்கள்.
இதனிடையே, பெங்களூருக்கு வர பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணம் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



