கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு ஏப்.15 வரை தடை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இரு தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்கக் கூடாது என்று இடைக்காலத் தடை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.