பசு எருதை மட்டும் கொல்ல தடை விதித்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

mumbai-high-courtமும்பை: பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பசுவதைக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச்சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படலாம். இந்நிலையில் இந்தத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்கள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் வி.எம்.கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு, “மகாராஷ்டிராவில் பசுக்கள் மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? ஆடுகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படுவதில் ஆட்சேபணை ஏதும் இல்லையா?” என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் சுனில் மனோகர் “அரசின் இந்த நடவடிக்கை ஒரு தொடக்கம்தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படுவது அவசியமானது என அரசு கருதுகிறது” என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அஸ்பி சினாய் “அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. குறிப்பாக, வெளிமாநிலங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த மனுக்கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளிமாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வருவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் ஏப். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.