பத்தனம்திட்ட: பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு கூறியுள்ளது.
இந்த வருடம் மழை இயல்பைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி, அதிகம் கொட்டித் தீர்த்தது. இதனிடையே, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் படலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதும், தொடர்ந்து அனைத்து வகை வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியதும், இதனாலேயே ஐயப்பன் கோபம் கொண்டார், அவரது சீற்றமே பெருமழையாக பிரவாகித்தது என்றும் ஒரு சிலர் முடிச்சுப் போட்டு கூறி வருகின்றனர்.
கேரளத்தில் பரவலாக மழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பத்தனம்திட்ட மாவட்டமும், பம்பையும் தான் பெரும் அழிவைச் சந்தித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அருகில் ஓடும் பம்பை ஆறு பெரு வெள்ளத்தால் சீறிப் பாய்ந்தது. இதனால் கோவிலுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்த நிலையிலும், பம்பை ஆற்று வெள்ளம் ஏற்படுத்திய சேதம் மிகப் பெரிது என்கிறார்கள்.
பெரு வெள்ளத்தால் பம்பை ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்டுள்ளது. சபரிமலை அடிவாரத்தில் திரிவேணி சங்கமத்தில் முன்பு ஆறு ஓடிய இடத்தில் பல அடி உயரத்திற்கு சேறும், சகதியும் மட்டுமே உள்ளது. ஆறு முன்பு ஓடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் விலகிப் பாய்கிறது. இந்நிலையில் பம்பை அணையின் குறுக்கே உள்ள இரு அணைகளையும் வனத்துறை மூடி உள்ளதால் ஆற்றில் நீரோட்டம் குறைந்துள்ளது.
பம்பை ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்ட இரு பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாலம் இல்லாததால் பம்பை ஆற்றைக் கடந்து கோவிலுக்குச் செல்ல இயலாது. பம்பை ஆற்றங்கரையில் 4000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டிருந்த ராமமூர்த்தி மண்டபம், பக்தர்களுக்கான குளியல் அறைகள், திரிவேணி வாகன நிறுத்தம் இடம் என, ஆற்றங்கரையில் இருந்த கட்டிடங்கள் அனைத்தையும் பம்பை ஆறு அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளது.
பம்பை பகுதியில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது. எனவே, இவற்றை எல்லாம் சரி செய்த பின்னரே கோவிலுக்கு பக்தர்கள் இனி அனுமதிக்கப் படுவர்; அதுவரை தரிசன அனுமதி காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக தேவசம் போர்டு கூறியுள்ளது.
ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் நடை திறக்கப் படும். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின் போது நீண்ட நாட்கள் நடை திறந்திருக்கும். ஆனால் தற்போது, பக்தர்கள் அனுமதிக்கப் படாத நிலையில், கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தேவசம் போர்டு கூறியுள்ளது. கார்த்திகை மாதத்துக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை மண்டல பூஜைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது!



