புது தில்லி : ‘ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலை, அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எச்சரித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யச்சூரி உட்பட அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், ‘ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம்’ என்று ராகுலுக்கு கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துகட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே கூறியபோது, ஆர்.எஸ்.எஸ்., என்பது விஷம். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதன் மூலம், விஷத்தை வலுக்கட்டாயமாக அருந்த வைக்க வேண்டும் என பொறி வைக்கப்படுகிறது. அதை ராகுல் அருந்த வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார்.
இதனால், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ள மட்டார் என்று கூறப் படுகிறது.
ஆனால், சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்தியடிகள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு கூடுதலைக் கண்டு, வியப்பு அடைந்து பாராட்டினார். தீண்டாமை என்பது அறவே ஒழிக்கப் பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டத்தைக் கண்டு வியந்து பாராட்டிய காந்திஜி, அதன் பின்னர் அனுதாபியாகவே மாறிப் போனார்.
குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து கூறுவது போல், ராகுலும் தற்போது ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைப் பற்றி மனசுக்குத் தோன்றியதை எல்லாம் கூறி வருகிறார். அவர் ஒரு முறை வந்து பார்த்துவிட்டால் அவர் கூறுவது சரியா என அவருக்கே தெரிந்துவிடும். ஆனால் எப்போதும் சுய விழிப்பு ராகுலுக்கு தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்வதுதான், காங்கிரஸ் தலைவர்களின் தலையாய பணி என்பதால் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.




