சபரிமலையில் இனி பெண்கள்… புதிய விதிமுறைகள் அமல்! பெண்களுக்கு தனி வரிசை இல்லை!

Published:

sabarimalai - 2026

திருவனந்தபுரம் : உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, சபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களும் இனி அனுமதிக்கப்படுவர் என்பதால் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது கேரள அரசு! அதன்படி,

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு தனி வரிசை அமைப்பது சாத்தியம் அற்றது என்பதால், பெண்களுக்கு தனி வரிசை கிடையாது என்று அறிவித்துள்ளார் அமைச்சர்!

நிலக்கல்- பம்பை அருகே பெண்களுக்காக 25 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பெண்கள் அனுமதிக்கப்படுவதால் சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக் கூடாது என்றும், நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதற்கேற்ப உடல் வாகு உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கேரள அரசு திங்கள்கிழமை இன்று, சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை அமைப்பதை நடைமுறைப்படுத்த இயலாது எனக் கூறியது. இருப்பினும், ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் வருவதற்கு ஏற்ற வகையில் சிறப்பான வசதிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கிய இரு திங்களிலேயே, பெண்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது குறித்து அரசுத் தரப்பில் விவாதிக்கப் பட்டது. செப்டம்பர் 28 ஆம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும், மாதவிடாய் பிரச்னை என்பது பெண்கள் அந்தக் கோயிலுக்குச் செல்வதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் தீர்ப்பு அளித்தது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதை அடுத்து, கேரள அரசின் சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதன் இறுதியில், சில முடிவுகள் எடுக்கப் பட்டன.

அதன்படி, ‘சன்னிதனம்’, கோவில் வளாகத்தில் பெண்களுக்கு தனி வரிசைஅமைப்பதை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை.

தரிசனத்திற்கான நீண்ட வரிசையில் 8-10 மணி நேரம் பெண்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பெண் பக்தர்கள் உடல் வலுவுடன் தயாராக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியாது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க தயாராக உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலை கோயிலுக்கு வர வேண்டும் – என்று தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆண் உறவுகள், நட்புகளுடன் வருவார்கள். தனி வரிசைகளில், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகளும் வரிசையில் செல்லும் போது ஏற்படக் கூடும்!

இருப்பினும் தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு தனி அறை, குளிக்கும் வ்சதி செய்து தரப்படும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

தரிசனத்துக்குப் பின் ‘சன்னிதனத்தில்’ அல்லது கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப் பட மாட்டார்கள். பக்தர்கள் அங்கிருந்து விரைந்து செல்லும் வகையில் கோவிலிலிருந்து வெளியேறும்படி கூறப் படுவர்.

பெருமளவிலான பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்ற வகையில், தரிசன நேரங்களையும் பூஜை நாட்களையும் அதிகரிப்பதற்காக கோவில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

திருப்பதி கோவிலின் மாதிரியில் இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்காக, டிஜிட்டல் முன்பதிவு வசதிகள் அறிமுகப் படுத்தப்படும்.

ஒவ்வொரு நாளும் சந்நிதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையை அறிந்திடவும், மேலும் பாதுகாப்பு வசதிகளை அதிகப் படுத்துவதற்காகவும் இது உதவும்.

அடுத்து பெண் பக்தர்களும் வருவர் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெண் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும்

சி.சி.டி.வி கேமராக்கள் கோவில் வளாகத்திற்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் நிறுவப்படவுள்ளன.

தேவைப்பட்டால் பெண் போலீஸாரும் புனிதமான ‘படினெட்டாம் படியில்’ நிறுத்தப் படுவார்கள்.

இந்த ஆண்டு மண்டல பூஜை – மகரவிளக்கு பிளாஸ்டிக் இல்லா விழாவாக இருக்கும்.

– என்று கூறினார் அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் டாம் ஜோஸ், முதலமைச்சரின் தனிச் செயலர் எம். வி. ஜெயராஜன், திருவாங்கூர் தேவாஸ்வம் போர்டு உறுப்பினர் கே.பி.சங்கர்தாஸ், டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா ஆகியோர் பங்கேற்றனர்.

இதனிடையே, சபரிமலை பக்தர்களின் நலனையும் தனித்துவத்தையும் பாதுகாக்க மாநில அளவிலான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் எஸ். ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் சபரிமலையை அழிக்க ஆளும் சிபிஐ (எம்) முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் பாஜக., எடுக்கும்” என்றும் அவர் கூறினார்.

கோயில்களின் முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான அம்சங்களை நீதிமன்றம் உறுதி செய்யத் தவறிவிட்டது! என்று, கோழிக்கோடில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸ்ரீதரன் பிள்ளை கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img