சபரிமலை கோயிலில் எல்லா வயதுப் பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் கடும் போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் எழுந்துள்ளது.
மாதப் பிறப்பு நாளான இன்று கோயில் நடை திறந்து பூஜை நடக்கின்றது. இந் நிலையில், சபரிமலையை நோக்கி பெண்கள் சிலர் வரத் தொடங்கினர். இதனால் எழுந்த பதற்ற நிலை காரணமாக, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். உடன் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனம் செய்தற்காக வந்த பெண், பத்தனந்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும், பாதுகாப்புக்காக நின்ற போலீஸார், அந்தப் பெண்ணை பத்திரமாக அங்கிருந்து அகற்றி, பத்தனம்திட்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாதவி என்ற 45வயது பெண் ஒருவர் பம்பாவைக் கடந்து சுவாமி ஐயப்பன் சாலையை அடைந்தபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்!
ஆனால், மாதவியைத் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தபோது, மாதவிக்கு பாதுகாப்பு அளித்த போலீஸார், அங்கிருந்து அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து 45 வயதுப் பெண் மாதவி முதல் முறையாக சட்ட அங்கீகாரத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தார் என்ற செய்திகள் பரவின. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை மாதவி பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் லிபி வழியிலேயே இறக்கி விடப்பட்டதாகவும், பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து அவரை பக்தர்கள் இறக்கி விட்டதாகவும், சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து கெரோ செய்தனர் என்றும் தகவல் வெளியானது.
பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், கடும் பதற்ற நிலை எழுந்துள்ளது. ஆனால், சபரிமலைக்கு வரும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கோயில் நடைமுறையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வெறித்தனத்துடன் கேரள கம்யூனிஸ்ட்களும் மாநில அரசும் ஈடுபட்டு வருவது கேரளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





