மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி:
மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், அதன் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற வேதிபொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கூறி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒரு சில மாநிலங்களில் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகி நூடுல்சின் மாதிரிகளை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்புமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது குறைதீர் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், சென்னைக்கு பதிலாக மேகி நூடுல்சின் சில மாதிரிகளை ஆய்வுக்காக மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆய்வகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் தற்போது அனுப்ப உள்ள ஆய்வு முடிவுடன், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.