புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடையில்லை என்றும், பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், பட்டாசுகளுக்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப் பட்ட மனு மீது தீர்ப்பு அளித்தது. அப்போது, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
முன்னதாக, கடும் மாசுபாட்டால் அவதிப்படும் தில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இத்தகையை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய சாராம்சம்…
* பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க முடியாது.
* பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
* சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது.
* அதிக சத்தம், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.
* தில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது.
* ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது.
* தீபாவளி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.
* கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் இரவு 11.45 முதல் 12.45 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் தேங்கிக் கிடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவால் அவற்றின் விற்பனை முடக்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளனர்.




