புது தில்லி: அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஆர்எஸ்எஸ்., அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விசாரிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுமாறு, மத்திய அரசை வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ‘அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட மத்திய அரசு முதலில் நிலத்தினைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் அதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அண்மையில் நாகபுரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் விஜயதசமி பேச்சு என்பது, அந்த அமைப்பின் கொள்கை விளக்கப் பேச்சு என்று கருதப் படும்.





