மறைந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்; தலைவர்கள் இரங்கல்!

புது தில்லி: மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும் சோஷலிஸவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88.

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர். வாஜ்பாய்க்கு நெருக்கமானவராக இருந்தவர். வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். அப்போதுதான் கார்கில் போர் நடைபெற்றது. விபி சிங் அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராகவும் இருந்தார்.

தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர், ஜனதா தளத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்து அறிவித்த நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் போராட்டத்தை சந்தித்தவர்.

அண்மைக் காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சோசலிசத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாமக., நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இந்திய அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராளித் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தொழிற்சங்கவாதியாக உருவெடுத்தவர். நெருக்கடி நிலைக் காலத்தில் தலைமறைவாக இருந்தபடியே அவர் நடத்திய சாகசங்கள் குறிப்பிடத் தக்கவை.

தொடர்வண்டிகளை கடத்த முயன்றதாகவும், தொடர்வண்டிப் பாதைகளை தகர்ப்பதற்காக வெடிமருந்து  கடத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் தொடர்வண்டித்துறை அமைச்சர் ஆனார். தொழில்துறைக்கு எதிரான தொழிற்சங்கத் தலைவர் என்று விமர்சிக்கப்பட்ட அவர் பின்னாளில் தொழில்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். ஜார்ஜ் பெர்னாண்டசின் மறைவு சோசலிசக் கொள்கைகளுக்கும், சோசலிச அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...