நாமக்கல்லில் புகழ்பெற்ற அனுமன் சந்நிதியில் தவறுதலாக 8 அடி உயர மேடையில் இருந்து தவறி கீழே தலைகுப்புற விழுந்த பட்டாச்சாரியார் இன்று இரவு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் காலமானார்.
சனிக்கிழமை என்பதால், நாமக்கல் அனுமன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நாமக்கல் பட்டாச்சாரியர் ஜெயராமனின் சகோதரரான ராஜு, அனுமன் திருமேனிக்கு நீராட்டல் முடிந்த பின்னர் பூ மாலைகள் சாற்றிக் கொண்டிருந்தார். நான்கைந்து மாலைகளை அனுமனுக்கு சாற்றிய பின்னர், 8 அடி உயர் மேடையில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, திடீரென கால் தடுமாறி வழுக்கி, தலை குப்புற மேலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கீழே விழுந்த ராஜூவுக்கு ரத்தப் போக்கும் ஏற்பட்டதால் அவர் உடனடியாக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவருக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ரத்த தானம் செய்ய பலர் முன்வந்தனர்.
சேலம் நியூரோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில் திங்கள் இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
அவர் உயிர் காக்கும் உபகரணத்தில் உதவியில் இருந்ததாகவும், உடலில் அசைவற்ற நிலையில், திடீரென திங்கள் இரவு 11.30 அளவில் நாடித்துடிப்பு குறைந்து உறவினர்கள் முன்னிலையில் உயிர் பிரிந்துள்ளது.