காங்கிரசை விட 3 மடங்கு அதிகமாக பாஜக., கைப்பற்றும்; நாட்டைத் துண்டாட அனுமதியோம்: மோடி சூளுரை!

Published:

modi in kashmir katuva - 2026

நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என கருத்துக்கணிப்புகள், தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் காஷ்மீரை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

மோடி இந்தக் கூட்டத்தில் பேசிய போது… எதிர்கட்சிகள் ஜம்மு காஷ்மீரை பிரிக்க முயலுகின்றனர். காங்கிரசும் காஷ்மீரில் வாரிசு அரசியல்வாதிகளும் இந்தியாவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கின்றனர். இந்தியாவை பிரிக்க அனுமதிக்க மாட்டோம். வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. காஷ்மீரை காங்கிரஸ் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் நிபந்தனையற்ற பேச்சு நடத்த தயாராக இருக்கிறது.

இரண்டு பிரதமர்கள் வந்தால் ஒரே இந்தியாவாக இருக்க முடியாது. காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. வறுமையில் வாழ்வோர் குறித்து காங்கிரஸ் இப்போது பேசுகிறது. 60 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை காங்கிரஸ் குறை கூறுகிறது. இது நமது படையினரை பழிப்பது போலாகும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு நாளைக்கூட, காங்கிரஸ் கட்சி அரசியலாக்க முனைகிறது. ராகுல் காந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு நேரம் இருக்கும்போது, ஜாலியன் வாலாபாக் துயரத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும், துணை குடியரசு தலைவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் நேரம் இருப்பதில்லை!

அப்துல்லா மற்றும் முஃப்தி குடும்பத்தினர் மாறி மாறி ஆட்சி செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியை முற்றாக சீரழித்துவிட்டனர். பயங்கரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொன்றழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்தோ, வான்வழித் தாக்குதல் குறித்தோ கேள்வியுற்றால், காங்கிரஸ் கட்சி பதற்றப்படுவது ஏன் என எனக்கு இதுவரை விளங்கவில்லை! சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்டவை நடைபெறும்போது, நமது ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கையின்றி, அவர்களின் வீரதீரங்கள் குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்புகிறது.

இதுபோன்ற காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும், நமது முப்படை வீரர்களின், திறனை, அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுவதாக உள்ளது.

கூட்டணிக் கட்சி தலைவரான உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீருக்கு என தனியாக பிரதமர் தேவை எனக் கூறி வரும் நிலையில், அதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? யாராக இருந்தாலும், நாட்டை துண்டாட ஒருபோதும், அனுமதிக்க மாட்டோம்!

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

இந்திய திருநாட்டில், 60 ஆண்டுகளாக ஒரு கட்சி அநீதி இழைத்து வந்த நிலையில், யார் தான், அதற்கு நீதி வழங்குவது? நாட்டின் ஜனநாயகத்திற்கு, குடும்ப அரசியல் மிகப்பெரும் அச்சுறுத்தல்!

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என கருத்துக்கணிப்புகள், தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டை காட்டிலும், தற்போது, பாஜவுக்கு ஆதரவான அலை, பலமாக வீசுகிறது என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடி பேசிய போது, அவரது பேச்சின் நடுவே கூடியிருந்த பொதுமக்கள் மோடி, மோடி என மக்கள் குரல் எழுப்பினர்.

Related articles

Recent articles

spot_img