ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: மாநிலங்களை விட்டு வெளியே செல்ல!

புது தில்லி: மாநில ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்தை விட அதிக காலத்துக்கு, தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளிமாநிலங்களில் தங்கியிருப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்தே, ஆளுநர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 18 அம்சங்கள் கொண்ட புதிய விதிகளில்… ஆளுநர்கள், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களில் ஓர் ஆண்டில் குறைந்தது 292 நாள்களாவது தங்கியிருக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் முன் அனுமதியில்லாமல் தாங்கள் ஆளுநர்களாகப் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவசரக் காலம் அல்லது அசாதாரண சூழ்நிலையில், மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கருதினால், அதுகுறித்து குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவரிடம் தகவல் தெரிவிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. அலுவல் ரீதியிலான பயணம் அல்லது தனிப்பட்ட பயணம், இந்தியாவிற்குள்ளேயே பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரு வாரம் முதல் 6 வாரங்களுக்கு முன்பாகவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆளுநர்களின் ஒவ்வொரு கோரிக்கையும், பிரதமரின் தனிச் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்படும். தனிப்பட்ட பயணத்தை அலுவல் ரீதியிலானது என்று ஆளுநர்கள் தெரிவிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஆளுநரின் ஒவ்வொரு அலுவல் ரீதியிலான பயணம் குறித்தும் ஆளுநர் மாளிகை விரிவாக அறிக்கை அனுப்ப வேண்டும். ஆளுநரின் பயண அளவானது, ஒராண்டில் 20 சதவீத நாள்களுக்கும் கூடுதலாக இருக்கக் கூடாது. வெளிநாடுகளுக்கு ஒருவேளை ஆளுநர் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்தால், குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு 6 வாரங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.