புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக்கறி உண்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை போனதால்தான் நேபாளத்திலும் இங்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் பேசி ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தி 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஹரித்துவாரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகாராஜ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி உண்டுவிட்டே கேதார்நாத் சென்றார். அவர் தன்னை தூய்மையாக வைத்திருக்கவில்லை. இதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார். இந்தப் பேட்டியின் போது விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சியும் உடனிருந்தார். சாக்ஷி மகாராஜின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய பேச்சுகளுக்காக அவர் மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

