மோடியை வசை பாடியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ராகுல்!

இந்தியா சற்றுமுன்

rahul tweet image - 2026

புதுதில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என தான் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் காவலாளி என தன்னைக் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டது என ராகுல் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியிருந்தார்.

இதை அடுத்து, உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தை திரித்துப் பேசியதாக ராகுல் மீது, பாஜக எம்பி., மீனாட்சி லேகி, அவதூறு வழக்கு தொடுத்தார்.

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், இதற்கு விளக்கம் கேட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ராகுல் தனது பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவு குறித்து தாம் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ராகுல் தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், ராகுல் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் வருத்தம் மட்டுமே தெரிவிக்கப் பட்டது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டனா்.

இந்நிலையில் ராகுல் தரப்பில் 3-வது முறையாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகக் கூறியுள்ளார் ராகுல்.

மூன்று பக்கத்துக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ராகுல் ரபேல் விவகாரத்தில் காவலாளியைத் திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என்று பேசியதற்காக தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகக் கூறியிருந்தார்.


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.