ராகுல் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக வெளியான தககலுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்வியைத் தழுவியதை காங்கிரஸாரால் ஜீரணிக்க இயலவில்லை!
இதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு காரணம் தேடி, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தில்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஐ.மு. கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கான காரணங்கள், மக்களிடம் காங்கிரஸ் எதைக் கொண்டு சேர்க்கவில்லை, என்ன செய்திருக்க வேண்டும், செய்த தவறுகள் என்ன என்று விவாதிக்கப் பட்டது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் கடிதம் அளித்துள்ளார் என்றும், அதனை காங்கிரஸ் காரியக் கமிட்டி நிராகரித்து விட்டது என்றும் தகவல்கள் வெளியாயின.
ராகுல் முடிவை நிராகரித்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், ராகுலே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியிருந்தது. இதனை ஊடகங்கள் பலவும் செய்தியாக வெளியிட்டன.
இந்நிலையில் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும், கட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் காரியக் கமிட்டி கூறியதாக தகவல் வெளியானது. அம்பிகா சோனியும் ராகுல் ராஜினாமா குறித்து தகவல் தெரிவித்த போது, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
தோல்விக்கு ராகுல் காந்தி மட்டும் காரணமில்லை, அதற்கு ஈடாக ஒவ்வொரு பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களும் காரணம் என்று கூறினார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான். எனவே ராகுல் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றார் அவர்.
இருப்பினும் 52 இடங்களை மட்டுமே பெற்று, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போனது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.





