நதிகள் இணைப்பை விரைவுபடுத்த சிறப்புக் குழு

புது தில்லி: நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் வகையில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை வெளியிட்ட அறிக்கையில்… நதிகள் இணைப்பு தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதற்காகவும், அதற்கான நிதி சார்ந்த திட்டங்களை பரிந்துரைப்பதற்காகவும் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட இணைப்புத் திட்டங்களை ஆராய்ந்து, தற்போதுள்ள் திட்டத்தினுடைய சாத்தியமற்ற இணைப்புகளுக்கு மாற்றுத் திட்டங்களையும் இந்தக் குழு பரிசீலிக்கும். ஒவ்வொரு நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பான பொருளாதார சாத்தியக்கூறு, சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், அப்பகுதியில் உள்ளவர்களை வேறு பகுதியில் குடியேற்றுவது ஆகியவை குறித்த மதிப்பீட்டு நெறிகளையும் பணிக்குழு உருவாக்கும்; மேலும் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும் இது முயலும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.