துப்பாக்கிச் சூடு பீதி: திருப்பதியில் குறைந்தது தமிழக பக்தர்கள் கூட்டம்

tirupathi-temple-golden-door திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர மாநில போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட பீதி காரணமாக, திருப்பதி கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுவாக தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏராளமான தமிழக பக்தர்கள் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் திருப்பதியில் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஆந்திர மாநில போலீஸாரின் கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூடு காரணமாக உண்டான பீதி இன்னும் மறையவில்லை. இதனால், தமிழக பக்தர்கள் திருப்பதிக்குச் செல்வதை இந்த முறை தவிர்த்து விட்டனர். இதனால், தமிழ்ப் புத்தாண்டு அன்று திருப்பதியில் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆந்திர மாநில போலீசார் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, பக்தர்களின் மனதில் அச்சமற்ற சூழ்நிலையை விதைப்பது ஆகியவற்றால் மட்டுமே திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் மீண்டும் அதிக அளவில் செல்வதைக் காண முடியும் என்று கூறப்படுகிறது.