
ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ்.ஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குப்படி மீண்டும் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதியில், முந்தைய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்ததால் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரமண தீட்சிதருக்கு ஆலயத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளது. ஆகம ஆலோசனை மண்டலியின் உறுப்பினராக மட்டுமின்றி ஸ்ரீவாரி கைங்கரியம் செய்வதற்கும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதனால் ஸ்ரீவாரி சேவையில் பங்கு பெறுவதற்கு அவருக்கு வழி பிறந்துள்ளது. மறுபுறம் ரமண தீட்சிதரின் இரு புதல்வர்களையும் கோவிந்தராஜ சுவாமி ஆலயத்திலிருந்து மீண்டும் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிகழ்ந்த அராஜகங்களையும் அநீதிகளையும் ரமண தீட்சிதர் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். இதனால் அப்போதைய மாநில அரசு மற்றும் தேவஸ்தானத்தால், அவர் பிரதான அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி திருமலை வேங்கடேஸ்வர ஸ்வாமியின் மிகப் புராதனமான ஆபரணங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக அவர் சந்தேகம் தெரிவித்ததுடன், ஆகம சாஸ்திரத்திற்குப் புறம்பாக ஸ்ரீவாரி பொட்டு எனப்படும் மடப்பள்ளியை மூடிவிட்டு அடியில் தோண்டத் தொடங்கினார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டதாக பலரும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனைத்தும் ஜெகன் மோகனால் மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஸ்ரீவாரி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.



