நேதாஜி இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார்: அனுஜ்தார்

புது தில்லி: நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போரை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1985ஆம் ஆண்டு இந்தியாவின் பைசாபாத் நகரில் இயற்கையாகத்தான் மரணமடைந்தார் என்று எழுத்தாளர் அனுஜ்தார் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இரண்டாம் உலகப் போர் நேரத்தில், ஜப்பான் செல்லும் வழியில் தைவானில் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது. அதே நேரம், சுபாஷ் ரஷ்யா அதிபராக இருந்த ஸ்டாலினால் கைது செய்யப்பட்டு சைபீரியா சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பைசாபாத் நகரில் 1985ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிரோடு இருந்தார் என்றும், அவர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்றும் புதிய தகவலைக் கூறி, எழுத்தாளர் அனுஜ் தார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். . “India’s biggest cover up” என்ற நேதாஜி தொடர்பான புத்தகத்தில் அனுஜ்தார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே நேதாஜி உறவினர்கள் நேருஜியால் உளவு பார்க்கப்பட்டனர் என்ற செய்தி பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நேதாஜி குறித்து தொடர்ச்சியாக பல தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.