நிலவில் ஆய்வு செய்யும் ‘சந்திரயான் – 2’ வெற்றிகரமாக பாய்ந்தது
இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 2 விண்கலம், GSLV மார்க் 3 ராக்கெட் மூலம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுமையத்தில் இருந்து இன்று பகல் விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 .
Launch of Chandrayaan 2 by GSLV MkIII-M1 Vehicle https://t.co/P93BGn4wvT
— ISRO (@isro) July 22, 2019
சுமார் ரூ.978 கோடி செலவில் தயாரான சந்திரயான் – 2 விண்கலம், மார்க்-3 ராக்கெட் மூலம், சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து இன்று மதியம் 2.43க்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
முன்னதாக, ஜூலை 15ஆம் தேதி, ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 2 விண்ணுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தள்ளிவைக்கப் பட்டது.
பின்னர் அந்தக் கோளாறு சரி செய்யப் பட்டு, இன்று சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
சந்திரயான் 1 விண்கலம்தான் இந்தியா சார்பில் விண்ணுக்கு நிலவை ஆராய அனுப்பப் பட்ட முதல் விண்கலம். மிகவும் குறைந்த செலவில் இந்தியாவால் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப முடியும் என்று காட்டிய போது, உலக நாடுகள் வாய் பிளந்து நின்றன.
இப்போது அதன் அடுத்த கட்டமாக, சந்திரயான் 1 ஏவப்பட்டு 10 ஆண்டு இடைவெளியில் சந்திரயான் 2 ஏவப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதுவரை கால் பதிக்காத நிலவின் தென்துருவத்தில் இந்த விண்கலம் இறங்கவுள்ளது. இதனால் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கும் இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப் படுகிறது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் சாதனைகளில் பெரும் மைல்கல் என்று கருதப்படுகிறது.