மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.15 மணி முதல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பால்கர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளில் உறங்கி கொண்டிருந்தவர்கள் பயந்து சாலைகளுக்கு ஓடிவந்தனர்.
மகாராஷ்டிராவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, வீடுகள் அருகே மழைவெள்ளம் தேங்கி உள்ளது. இந்தநிலையில், பால்கர் மாவட்டத்தின் தஹானு பகுதியில் உள்ள வசலபாடா என்ற இடத்தில், வீடு இடிந்து விழுந்தது. இதில் ரிஷ்மா மெக்வாலே வயது 55 என்ற பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவிலேயே, மேகாலயா, நாகாலந்து, சிக்கிம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில்தான் நில நடுக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இயற்கை பேரழிவுகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக தப்பிக்க நவீன இயந்திர கருவிகளை உருவாக்க ஜியாலஜிஸ்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில், இதேபோல வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மணிப்பூரில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.