இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்

ராமநாதபுரம்: இலங்கையில் இன்னும் மோசமான வாழ்க்கைச் சூழல்தான் உள்ளது என்று கூறி, அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக இருந்த நேரத்தில், இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த சத்தியசீலம், மனைவி பரமேஸ்வரி, மகள்கள் விடுதலைச் செல்வி, மேரி, அஞ்சலிதேவி ஆகியோர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். 1999ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராமேஸ்வரம் அகதி முகாமில் தங்கியிருந்த அவர்கள், 2010 மார்ச்சில், இலங்கைக்குச் செல்ல விரும்பினர். இதை அடுத்து, அதற்கான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இலங்கைக்குச் சென்றனர். பின்னர் இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த அவர்கள், அங்கே தங்களுக்கான வாழ்வியல் சூழ்நிலைகள் இன்னும் மோசமாகத்தான் இருப்பதாகவும், எனவே அங்கிருந்து மீண்டும் அகதிகளாக வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தனுஷ்கோடி கடற்கரை அருகில் உள்ள அரிச்சல்முனைக்கு வந்து சேர்ந்த அவர்கள், தங்களுக்கு இலங்கையில் இத்தனை ஆண்டுகளாக வசிப்பதற்கு ஒரு வீடு கூட வழங்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இலங்கையில் இருந்து படகில் வருவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் செலுத்தியதாகவும் அவர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.