மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சீஸன் 8ல், நேற்று நடந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி அபாரமாக சேஸ் செய்து மும்பை அணி நிர்ணயித்த 183 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது. மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. மும்பை அணியில் காயத்தால் விலகிய ஆரோன் பிஞ்ச்க்கு பதிலாக லென்டில் சிமோன்ஸ் சேர்க்கப்பட்டார். ஸ்ரீயாஸ் கோபால், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு அம்பதி ராயுடு, ஹர்பஜன்சிங் இருவரும் இடம்பெற்றனர். முதலில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி முதல் 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ஹர்பஜன்சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன் எடுத்து வெளியேறினார். மும்பை அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், பொல்லார்ட்டும் கூட்டணி அமைத்து ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். அணியின் ஸ்கோர் 132 ரன்களை எட்டிய போது, ரோகித் சர்மா 50 ரன்களில் ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் பொல்லார்ட் 21 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 6ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய அம்பதி ராயுடுவும் அதிரடி காட்ட மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 183 ரன் குவித்தது. 184 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணியில் வெய்ன் ஸ்மித்தும், பிரன்டன் மெக்கல்லமும் நல்ல துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடியின் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் முற்றுப்புள்ளி வைத்தார். பிரன்டன் மெக்கல்லம் 46 ரன்னிலும், ஸ்மித் 62 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர். பிளிஸ்சிஸ் 11 ரன்னிலும், கேப்டன் தோனி 3 ரன்னிலும் ஆட்டம் இழந்த போதும், சுரேஷ் ரெய்னாவும், வெய்ன் பிராவோவும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பிராவோ ஒரு சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 43 ரன்களுடனும் பிராவோ 13 ரன்னுடனும் ஆட்டத்தை நிறைவு செய்தனர். இதை அடுத்து சென்னை அணி தொடர்ச்சியாக 3வது வெற்றி பெற்றது.
ஐபிஎல் 8 -மும்பையுடன் வெற்றி: சென்னைக்கு ‘ஹாட்ரிக்’
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari