வெள்ளிக்கிழமை வரை சிதம்பரம் கைது நாடகம் தொடரும்?!

Published:

chidambaram karthi nalini - 2026

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க மறுத்தது தில்லி உயர் நீதிமன்றம். இந்நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து சூட்டோடு சூடாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து, முன் ஜாமீன் பெற்றுவிடலாம் என்று முயன்றார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாகக் கூறியது. இந்நிலையில், தாம் கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக, தலைமறைவாகிவிட்டார் ப.சிதம்பரம் என்கிறார்கள்!

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த வழக்கை விசாரிக்க மறுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதனை சரி செய்து தாக்கல் செய்யும் படியும் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், தலைமை நீதிபதி அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து வருகிறது. எனவே சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க இயலாது என்று தலைமை நீதிபதியும் மறுத்துவிட்டார்.

தொடர்ந்து, சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மீண்டும் நீதிபதி ரமணா முன் முறையிட்டார். அப்போது நீதிபதி ரமணா, சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப் படாது; மனுவில் உள்ள குறைபாட்டை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

உச்ச நீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இதனால், பட்டியலில் சேர்க்க முடியாது என்று கூறினார். இதனால், நீங்கள் மனுவில் பிழைகளைத் திருத்தி தாக்கல் செய்தாலும், பட்டியலில் சேர்க்கப்படாத மனுவை விசாரிக்க இயலாது என்று நீதிபதி ரமணா கூறினார்.

இதையடுத்து மாலை 4 மணிக்கு அயோத்தி வழக்கு விசாரணை முடிந்த பின்னர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை அணுகி, அவரிடம் முறையிட சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்கள் எண்ணினர்! ஆனால், அயோத்தி வழக்கு விசாரணைக்குப் பின்னர், அந்த அமர்வு நிறைவுற்று, தலைமை நீதிபதியும் தனது அறைக்கு திரும்பி விட்டார்.

இந்நிலையில், தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய பதிவாளர், பின்னர் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதை அடுத்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆக.23 வெள்ளிக்கிழமை விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

இதனிடையே, நேற்று மாலை 6.30 மணி வரையில் தனது சேம்பரில் ப.சிதம்பரம் இருந்தார் என்று கூறினார் காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி. மேலும், ப.சிதம்பரம் பாதி வழியில் தனது காரில் இருந்து இறங்கிக் கொண்டார். அவர் எங்கே சென்றார் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ப.சிதம்பரத்தின் கார் ஓட்டுநர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ஆனால், ப.சிதம்பரம் தரப்பில் வாதாடிய கபில் சிபல், தாம் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை என்று சிதம்பரமே கூறியுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்னும் இரு நாட்கள், ப.சிதம்பரம் குறித்த பரபரப்பு கிளம்பி அடங்குமா அல்லது முன் ஜாமீன் குறித்த வழக்கு வெள்ளிக் கிழமை உச்ச நீதிமன்றத்தில் வரும் முன்னரே சிதம்பரம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் படுவாரா என்றெல்லாம் விவாதம் சூடு கிளம்பியுள்ளது.

இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்துக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

P Chidambaram and Nalini Chidambaram - 2026ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கின் போக்கு முதலில் கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து தொடங்குகிறது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான, மும்பையைச் சேர்ந்த நிறுவனமான ஐ.என்.எக்ஸ் மீடியா, 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் கூட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதில் முதலில் சிக்கியவர் கார்த்தி சிதம்பரம்! இவர் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். கடந்த வருடம் இதில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது அவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதால், சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றன ஊடகங்கள்.

மேலும், கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி, ப. சிதம்பரத்தின் மனைவி நளினி ஆகியோரும் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்களின் வங்கிக் கணக்குக்கு ஐஎன்எக்ஸ் நிறுவனம் மூலம் முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img