சென்னை:
கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவைப் பருவம் தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்டன. சர்க்கரை உற்பத்திக்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான கொள்முதல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை சர்க்கரை ஆலைகள் செயல்படுவது வழக்கம். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு வாரங்களில் அதற்கான விலை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். வழக்கம் போலவே நடப்பாண்டிலும் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாக சர்க்கரை ஆலைகளில் அரவைப் பருவம் தொடங்கி விட்ட நிலையில், கரும்புக்கான விலை இன்னும் உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்காதது தான். அரவைப் பருவம் தொடங்குவதற்கு முன்பே அக்டோபர் மாதத்தில் கொள்முதல் விலை அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், திசம்பர் மாதமாகியும் கரும்பு விலை அறிவிக்கப்படாததில் இருந்தே அரசு முடங்கிக் கிடப்பதை உணர முடியும்.
2016-17ஆம் ஆண்டிற்கான கரும்பு கொள்முதல் விலையை மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதியே அறிவித்து விட்டது. அத்துடன் தமிழக அரசு ஊக்கத் தொகையை சேர்த்து மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலையுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.650 சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் இது டன்னுக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் பரிந்துரை விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டது. கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலே உயர்த்தி வரும் நிலையில், அதை ஈடுகட்டும் வகையில்பரிந்துரை விலை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசோ சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பரிந்துரை விலையை குறைத்துவிட்டது.
நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. இத்தகைய சூழலில் மாநில அரசு அதன் பரிந்துரை விலையை உயர்த்தி வழங்கினால் தான் விவசாயிகளின் நலனை பாதுகாக்க முடியும். உத்தரப் பிரதேச அரசு கரும்புக்கான பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.750 சேர்த்து ரூ.3050 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்பதால், நடப்பு பருவத்திற்கான தமிழ்நாடு அரசின் பரிந்துரை விலையை நிர்ணயிப்பதற்கு அதை அடிப்படையாக கொள்ளக் கூடாது.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டதற்கு பிறகு சர்க்கரை சந்தை நிலவரம் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகளில் இருந்து ஒரு டன் சர்க்கரை ரூ.21,640 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் படிப்படியாக விலை உயர்ந்து கடந்த வார நிலவரப்படி தமிழக சர்க்கரை ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சர்க்கரையின் விலை டன்னுக்கு ரூ.36,250 ஆக உயர்ந்திருக்கிறது. இது சுமார் 70% உயர்வாகும். இதனால் சர்க்கரை ஆலைகளுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தில் ஒரு பகுதி விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.2450 செலவு ஆவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் 50% லாபம் மற்றும் போக்குவரத்து செலவுகள் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4,000 நிர்ணயிக்க வேண்டும். சர்க்கரை விலை 70% வரை அதிகரித்திருப்பதாலும், சர்க்கரை தயாரிக்கும்போது கிடைக்கும் துணைப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதாலும் இந்த அளவுக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது சாத்தியம் தான். இதை உணர்ந்து உழவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4000 என்று அரசு அறிவிக்க வேண்டும்.



