திருமணத்துக்கு மறுப்பு: தந்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு

நாமக்கல்:

திருமணத்துக்கு மறுத்ததால் தந்தை தாக்கியதில் 17 வயது சிறுமி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே அ.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்-ராஜம்மாள் தம்பதியினரின் மகள் ஐஸ்வர்யா (17). இவர், திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியபடி பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த பெற்றோர், அவரை அண்மையில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திருமணத்துக்கு ஐஸ்வர்யா சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

புகார்: தனக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவது குறித்து சைல்டு லைன் அமைப்புக்கு நேரில் வந்து அவர் புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த 14-ஆம் தேதி அவரை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த 15-ஆம் தேதி குழந்தைகள் நலக் குழுமம் முன்பு ஆஜரான ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என எழுதிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்கு சென்றவுடன் மீண்டும் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பிரச்னையில், ஐஸ்வர்யாவை தந்தை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை நாமக்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதையடுத்து ஐஸ்வர்யா உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெற்றோர் சனிக்கிழமை இரவே எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த எருமபட்டி போலீஸார் ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜம்மாள் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
பெற்றோர் தாக்கியதில் மயக்கமடைந்த ஐஸ்வர்யா, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.

மாவட்ட குழந்தைகள் நலக் குழும அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: 15-ஆம் தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என அவரது பெற்றோர் எழுதிக் கொடுத்தனர். பெற்றோர் உடன் செல்ல சம்மதிப்பதாக, ஐஸ்வர்யாவும் எழுதிக் கொடுத்தார்.

இதையடுத்து ஐஸ்வர்யாவை பெற்றோருடன் அனுப்பி வைத்தோம். அவர் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கோரியுள்ளோம் என்றார்.

கடந்த ஆண்டே திருமணமா?
ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டே உறவுக்காரரான லாரி ஓட்டுநருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், ஆனால், படிக்க வேண்டும் என சிறுமி பிடிவாதம் பிடித்ததால், அவரை பெற்றோர் கடந்த ஜூன் மாதம் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுமியை, பெற்றோர் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அங்கு கணவரோடு வாழ விரும்பாத ஐஸ்வர்யா, கடந்த 14 ஆம் தேதி சைல்டு லைன் அமைப்பில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாரில் தனது உறவுக்காரரான லாரி ஓட்டுநருடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், அவரால் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு ஏற்படுவதாகவும், இதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை சைல்டு லைன் அமைப்பினர், கடந்த 14-ஆம் தேதி இரவே அவரை குழந்தைகள் நலக் குழும பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்ட ஐஸ்வர்யா, சனிக்கிழமை தந்தை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.