சென்னை: விஷன் – 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவதாக கடந்த 2001 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றது முதல் ஜெயலலிதா கூறி வந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 2011 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பின் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போவதாகக் கூறி, தொலைநோக்குத் திட்டம் -2023 (Vision 2023) என்ற ஆவணத்தை 22.03.2012 அன்று ஜெயலலிதா வெளியிட்டார். தொலைநோக்குத் திட்டம் -2023 வெளியிடப்பட்ட பிறகு, இரு ஆண்டுகள் கழித்து 23.02.2014 அன்று அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டதைத் தவிர அதன் இலக்குகளை எட்டுவதற்காக தமிழக அரசு இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. தொலைநோக்கு திட்டத்தின் முதல் இலக்கு 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் ரூ.6.20 லட்சமாக உயர்த்துவது ஆகும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 2 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும்; ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.10 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் தனிநபர் வருமானம் இப்போது தான் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ரூ. 15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை ரூ.4.09 லட்சம் கோடி செலவிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ. 4,000 கோடி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் மாநில வளர்ச்சிக்கு அவசியமான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. உதாரணமாக, 20,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, இதில், 17,340 மெகாவாட் திறன் கொண்ட 13 மின் திட்டங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. இவற்றில் 660 மெகாவாட் எண்ணூர் மின்திட்டம், 1600 மெகாவாட் உப்பூர் மின் திட்டம் ஆகியவை அடுத்த ஆண்டில் முடிக்கப்பட்டு மின்னுற்பத்தி தொடங்கப்பட வேண்டும். தூத்துக்குடி, உடன்குடி, வடசென்னை, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் 8120 மெகாவாட் திறன் கொண்ட 7 திட்டங்களை 2017 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தியாக வேண்டும். 2018 ஆம் ஆண்டிற்குள் 1460 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களும், 2020 ஆம் ஆண்டுக்குள் 1500 மெகாவாட் திறன் கொண்ட ஜெயங்கொண்டம் மின் திட்டம் உட்பட மொத்தம் 5500 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த 13 திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக இதுவரை ஒற்றை செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. இவற்றில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் திட்டங்களுக்கான இடம் கூட இன்னும் முடிவாகவில்லை. நெடுஞ்சாலை வசதிகளைப் பொறுத்தவரை செங்கல்பட்டு-தூத்துக்குடி, தூத்துக்குடி- கோயம்புத்தூர், கோவை- செங்கல்பட்டு இடையே ரூ. 24,000 கோடி செலவில் முக்கோண 6 வழி/8 வழி சாலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவை மட்டுமின்றி, ரூ.1.34 லட்சம் கோடி செலவில் மொத்தம் 16 பெரிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் காகிதத்தில் கனவுத் திட்டங்களாக இருக்கின்றனவே தவிர நடைமுறையில் நனவுத் திட்டமாக மாற்ற எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை. ரூ.1.88 லட்சம் கோடி செலவில் மத்திய அரசுடன் இணைந்து தொடர்வண்டிப் பாதை மேம்பாட்டுத்திட்டங்கள், ரூ.25,000 கோடியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள், ரூ.1,60,985 கோடியில் தொழில்துறை திட்டங்கள், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் என ஏராளாமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்துமே அறிவிப்பு நிலையிலேயே உள்ளனவே தவிர, செயல்பாட்டுக்கு வருவதாக தெரியவில்லை. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைப்பு, அனைத்து கிராமங்களுக்கும் கண்ணாடி இழை வழியாக அகண்ட அலைவரிசை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்துறை ஆண்டுக்கு 8 & 10% வளர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 12 விழுக்காடாக குறைந்தது தான் மிச்சம். மொத்தத்தில் தொலைநோக்குத் திட்டம் தொலைதூரத்தில் இருக்கிறதே தவிர, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை. இந்த உண்மையை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்ந்திருக்கிறது. தொலைநோக்குத் திட்டம் 2023 வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாள் (24.03.2012) கிருஷ்ணகிரி செய்தியாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த நான்,‘‘ தொலைநோக்குத் திட்டத்திலுள்ள அம்சங்களைப் பார்த்ததும் விட்டலாச்சாரியா படம் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. மாயாஜாலங்களை நிகழ்த்தினால் கூட இந்த இலக்குகளை எட்ட முடியாது. 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் இதையே தான் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கப்போவதாகவும், இதை செயல்படுத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். இவையெல்லாம் தமிழகத்தை தனியாருக்கு கூறு போட்டு விற்கும் நோக்கம் கொண்டவை’’ என்று கூறியிருந்தேன். அது இப்போது உண்மையாகிவிட்டது. இத்திட்ட இலக்குகளை எட்டுவதில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஆனால், கடன் மட்டும் அப்போதிருந்த ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியைடைவதாக வாய்ப்பந்தல் போடும் ஆட்சியாளர்கள், தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்குகளை எட்டுவதற்காக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இதுவரை எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
விஷன் – 2023: வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari