வேலூர் சாலை விபத்து குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் விளக்கம்

சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றப் பேரவையில், வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆற்றிய உரையின்போது விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கம்: கடந்த 22.3.2015 அன்று வேலூர் மாவட்டம், கார்ணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் ராஜ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் காட்பாடி-சென்னை சாலையில் தங்கள் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, இரவு சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த கார் ஒன்றின்மீது மோதியதில், தானும், வாகனத்தை ஓட்டிய ராஜ்குமாரும் கீழே விழுந்ததில், காயங்கள் ஏற்பட்டதாகவும், ராஜ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், தான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் காட்பாடி காவல் துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு துணி எடுக்க இருவரும் அன்று மாலையில் அதே வாகனத்தில் காட்பாடி புறப்பட்டுச் சென்று இரவு சுமார் 9.30 மணியளவில் தங்கள் கிராமத்தை நோக்கி இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அப்போது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், தனது அரசு வாகனத்தில் வாகன ஓட்டுநர் மோகன் வாகனத்தை ஓட்ட, தனது உதவியாளர்கள் இருவருடன் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கார்ணம்பட்டு கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் இருசக்கர வாகனம் மாவட்ட ஆட்சியரின் கார் மீது மோதியுள்ளது. இதில், ராஜ்குமார் காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த உதயசூரியனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மாவட்ட ஆட்சியர், விபத்து குறித்து மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையில் தகவலறிந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். காயமடைந்த உதயசூரியனை உடனடியாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்ததுடன், இறந்த ராஜ்குமாரின் பிரேதத்தை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இறந்த ராஜ்குமாரும், காயமடைந்த உதயசூரியனும் விபத்து நடந்தபோது குடிபோதையில் இருந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவ்வழக்கில், 23.3.2015 அன்று ராஜ்குமாரின் பிரேதத்தின் மீது வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பிரேதத்தை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். ராஜ்குமாரின் தாயார் வளர்மதி, கார்ணம்பட்டு கிராம பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருகிறார். இந்நிலையில், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கார்ணம்பட்டு சென்ற திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் மற்றும் திமுகவினர், மாவட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி திடீரென கார்ணம்பட்டு இரயில்வே மேம்பாலத்தின் மீது சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்றவுடன், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, பின்னர் காட்பாடி – வேலூர் சாலையில் சித்தூர் பேருயது நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் புலன் விசாரணை அடிப்படையில் ஒட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். திமுகவினர் இரண்டு இடங்களில் சாலை மறியல் செய்து, போக்குவரத்திற்குத் தடை ஏற்படுத்தியதற்காக திருவலம் மற்றும் காட்பாடி காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன. சாலை விபத்து குறித்த வழக்கில் புலன் விசாரணை அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • என்று கூறியுள்ளார்.