*கால்நடை கொலையை தடை செய்ய வழக்கு : விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு*
புதுடில்லி : இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
*கால்நடைகளுக்காக வழக்கு :*
டில்லியை சேர்ந்த வினீத் சகாய் என்பவர் , இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் அல்லது கால்நடைகளை அடித்து கொல்வதில் இருந்து காப்பதற்கு ஒரே சீரான கொள்கை வகுக்க வேண்டும் என கோரி பொது நல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல், கால்நடைகளை அடித்து கொல்வது, அதற்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக மாநில அரசுகளின் சட்டங்களில் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
*விசாரிக்க மறுப்பு :*
குறுகிய விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதுபற்றி அவர்கள் குறிப்பிடுகையில், “கால்நடைகளை அடித்துக்கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு கோர்ட் உத்தரவிட முடியாது” என கூறி விட்டனர்.



