நாற்காலி கனவோடு தேர்தலில் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளா வெறும் 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ஐரோம் ஷர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். பின்னர் அவருக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலையான ஐரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக விடுவித்து இம்பால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி ஐரோம் ஷர்மிளா சுதந்திரமாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐரோம் ஷர்மிளா, புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதற்கு தனது கட்சி தீவிரமாக போராடும் என அறிவித்ததுடன் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் ஐபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிவரும் நிலையில், தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் இபோபி சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் போனாலும் இரண்டாம் இடத்தையாவது பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐரோம் ஷர்மிளா, வெறும் 85 வாக்குகளை மட்டுமே பெற்று, டெபாசிட் பறிபோகும் அளவுக்கு படுதோல்வி அடைந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐரோம் ஷர்மிளா, பண பலமும் அதிகார பலமும் தன்னை வீழ்த்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending