மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Maran-brothers புது தில்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மத்திய தகவல் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து மத்திய அமலாக்கத்துறை புதன் கிழமை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஆக.29 ஆம் தேதி, சிபிஐ இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதில், 151 பேரில் ஒப்புதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தொடர்புடைய 655 கோப்புகள் இதற்கு துணையாக சமர்ப்பிக்கப்பட்டன. தயாநிதி மாறன், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஏர்செல்லின் சிவசங்கரனை மிரட்டி, அழுத்தம் கொடுத்து, மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ்க்கு 2006ல் பங்குகளை விற்கச் செய்தார் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறனால் சலுகைகள் வழங்கப்பட்ட மலேசிய நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல்லை கைப்பற்றியதும், அதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே டிசம்பர் 2006ல் தேவைப்பட்ட உரிமம் மாறனால் வழங்கப் பட்டுள்ளது என்று சிபிஐ கூறியது. சிபிஐயின் இந்தக் குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்ஸிஸின் டி.அனந்தகிருஷ்ணன், மலேசிய நாட்டின் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல், மற்றும், சன் டிவி பி.லிட்., மேக்ஸிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட், சௌத் ஏசியா எண்டர்டெய்ன்மெண்ட் ஹோல்டிங் லிட், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் பிஎல்சி ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கிரிமினல் குற்றப் பதிவு பிரிவு 120-பி.யின் படி குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ள சொத்து விவரம்:

  • கலாநிதி மாறன் வங்கியில் டெபாசிட் செய்துள்ள ரூ.100 கோடி,
  • தயாநிதி மாறனின் ரூ.7.47 கோடி வங்கி வைப்புத் தொகை,
  • சன் டைரக்ட் நிறுவனத்தில் கலாநிதியின் ரு.139 கோடி
  • ரூ.266 கோடி மதிப்புள்ள சன் நெட்வொர்க்கின் டிவி, நிலம், கட்டடம்,
  • ரூ. 171.558 கல் கம்யுனிகேஷன் நிலம், கட்டடம்,
  • கலாநிதி மாறனின் ரூ.139 கோடி பங்குகள்
  • என, வங்கி வைப்பு நிதிகள் சேர்த்து 11 வகையான சொத்துகளை முடக்கி வைத்து அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.