எச்சரிக்கையா இருங்க… செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
cell - 2026

வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை வெங்கடேசன் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேச முயன்றார். அப்போது போன் வெடித்து சிதறியது.

இதில் அவரது தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகத் தெரிகிறது.

முதலில் செல்போன் வெடித்து காயமடைந்ததாகக் கூறி வந்தவர், பின்னர் வீட்டின் கழிவறை அருகே குப்பைக்கு தீ வைத்த போது அதிலிருந்து ஏதோ கெமிக்கல் போன்ற பொருள் வெடித்துச் சிதறியதாகக் கூறியுள்ளார். அதனால் ஏற்பட்ட காயம் இது என்று அவர் கூறியுள்ளார். அவர் அவ்வாறு அடையாளம் காட்டிய இடத்தையும் போலீசார் பார்வையிட்டனர். அங்கிருந்த சில பொருட்களையும் எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், செல் போன் வெடித்ததாகக்கூறி பின்னர், கெமிக்கல் என்று சொல்லி, வெங்கடேசன் மாறி மாறி கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. செல்போன் வெடித்ததா? அல்லது கெமிக்கல் வெடித்து சிதறியதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.