இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்திற்கு காரணமாக இருந்த கிரேன் இயக்கிய நபர் தலைமறைவானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் கால்வாசி ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த செட் அமைக்கும் பணிகளின் போது கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. 150 அடி உயரத்தில் இந்த கிரேன் இருந்துள்ளது. இதில் பெரிய அளவில் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் என்பதால் பெரிய அளவில் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த விளக்குகளுடன், கிரேன் மொத்தமாக கீழே விழுந்துள்ளது.
இந்த இடத்தில் தலைமை செயலகம் செட் போட்டு இருக்கிறார்கள். அதற்கு அருகில் இருந்த கிரேன்தான் கிழே விழுந்தது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
அதேபோல் இந்த வவிபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ப்ரொடக்சனில் பணியாற்றிய 3 பேர் உயிரிழந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மூன்று பேரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு இயக்குனர்கள், நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் இந்த சம்பவத்திற்காக இன்று அதிகாலை இரங்கல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தில் கிரேனை இயக்கிய நபர் மீது தற்போது காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. ஆனால் இவர் இப்போதே எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. விபத்திற்கு பின் அவர் தலைமறைவாகிவிட்டார். இவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறார்கள்.