கொரோனா பாதிப்பு பற்றி பேரவையில் பேச… திமுக., திட்டம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
Chief Secretariat - 2026

தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. அப்போது, `கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. தமிழகத்தில் `கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறித்தும் விவாதம் நடத்த திமுக வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் மறைந்த திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று (10ம் தேதி) சட்டப்பேரவை கூட்டம் இல்லை. இன்று (11ம் தேதி) மீண்டும் காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடக்கிறது.

இன்று கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

வனத்துறை மீது நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்து பேசுவார். சுற்றுச்சூழல் துறை மீது நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர் கருப்பணன் பதில் அளித்து பேசுவார். தொடர்ந்து இரண்டு துறைகளுக்கும் 2020-21ம் ஆண்டுக்கான நிதி வழங்குவதற்கு பேரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.

இன்று பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், நேரம் இல்லா நேரத்தில் (ஜீரோஹவர்) தமிழகத்தில் தற்போது தலைதூக்கியுள்ள `கொரோனா’ வைரஸ் பாதிப்பு மற்றும் அதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் மீது இன்றே விவாதம் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்த திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.