நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்?
புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா
வன்முறையில் ஈடுபடாத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் ஞானிகளாகலாம்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(முன்பு சற்று சுருக்கமான பதிவு.இப்போ விரிவானது)
ஒரு சமயம்,ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார்கள்.அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்று தூரத்தில் உள்ள மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் சிலரைத் தவிர, அங்கு வேறு எவருமில்லை.
அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன் மனைவியுடன், ஒரு பையனைக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம் செய்து எழுந்தனர்.ஸ்ரீஸ்வாமிகள் அவர்களை உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை.
வந்த மனிதரும் அவர் மனைவியும், “எங்கள் மகன் இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து கொள்கிறான்.பெரியவாள் கருணை புரியவேண்டும்” என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்கள். பெரியவர்கள் புன்சிரிப்புடன் சிறுது நேரம் மௌனமாக இருந்தார்கள். சில நிமிஷங்கள் கழிந்தபின் பேச ஆரம்பித்தார்கள்.
(பெரியவா சொன்ன 7 கதைகள் கீழே)
“இந்த உலகமே பைத்தியக்காரத்தனமான உலகம் தான்.பரமேச்வரனையே, ‘பித்தா பிறைசூடி’ என்று பாடி ஒரு நாயனார் ஈச்வரனுக்கே பைத்தியக்காரப் பட்டம் கட்டவில்லையா? மதுரையில் ஒரு சமயம், பரமேச்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்தார். பைத்தியக்காரனைப் போல் ஆடிக்கொண்டும், சேஷ்டைகள் செய்துகொண்டும்,வைகை வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கத்தில் பலருடன் தானும் மண் சுமந்துகொண்டு போனார். அவருடைய சேஷ்டைகளைக் கவனித்த அரசனின் அதிகாரிகள் அவரை அடித்தார்கள். அந்த அடி, அரசன் உள்பட அனைவரின் முதுகிலும் பட்டது.பைத்தியக்கார சேஷ்டையுடன் கூடிய கூலியாள் மறைந்துவிட்டார். இந்தக் கதையை நாம் கேட்டிருக்கிறோமல்லவா?”
“ஆதிசங்கர பகவத்பாதாள் தக்ஷிண தேச யாத்திரை செய்து வரும்போது ஸ்ரீவலி என்ற ஊரில் ஒரு சமயம் தங்கியிருந்தார்.அந்த ஊரில் நிறையப் படித்த ஒருவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பையன், தாய் தந்தை உள்பட யாரிடமும் பேசுவதே இல்லை. ஆசாரியாள் ஊருக்கு வந்ததை அறிந்த பெற்றோர்கள், அந்தப்பையனை ஆசார்யாளிடம் அழைத்து வந்து,தாமும் வணங்கி,பையனையும் வணங்கும்படி செய்து, மகன் உன்மத்தனாக இருப்பதைக் கூறினார்கள். பகவத்பாதாள் அந்தப்பையனைப் பார்த்து,”ஏனப்பா இப்படி ஜடமாகி இருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.”நான் ஜடமல்ல” என்று ஆரம்பித்து, வேதாந்தக் கருத்துக்களைக் கொண்ட பல ஸம்ஸ்க்ருதச் செய்யுள்களைப் பாடினான் அவனை சங்கரர் தன்னுடன் விட்டுவிடும்படி பெற்றோர்களிடம் சொல்ல, அப்பையன் ஆசார்யாளுடனே இருந்து, அவரிடம் ஸந்நியாஸம் பெற்று, ‘ஹஸ்தாமலகர்’ என்று பெயரையும் பெற்று, அவருடைய முக்கிய சிஷ்யர்களில் ஒருவரானார்.”
“ஜடபரதரும் புத்திஸ்வாதீனமில்லாதன் என்று நினைத்து,ராஜாவின் பல்லக்கைச் சுமக்கச் சொன்னார்கள். பல்லக்கைத் தூக்கிக் கொண்டு ஆடி ஆடி வந்ததால்.அவரை ராஜாவின் சேவகர்கள் அடித்தார்கள். பிற்காலத்தில் அரசனுக்கு, ஜடபரதர் பெரிய ஞானி என்று தெரிந்தது. ராஜாவும், மற்றவர்களும் அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்டார்கள்
விஷ்ணுபக்தன் ஒருவன் மஹாவிஷ்ணுவைக் காண ஆசை கொண்டு,பைத்தியக்கரத்தனமாக கடல் நீரை மொண்டு கொட்டுவதில் ஈடுபட்ட கதை, -காஞ்சியில், ஊமையாகவும், பைத்தியம் போலுமிருந்த மூகன் காமாக்ஷி அம்பாளின் அனுக்ரஹத்தால். கவியாக மாறி, அம்பாளின் மீது ஐநூறு ச்லோகம் பாடியவிவரமும், பிறகு – சமீப காலத்தில் காஞ்சியில் பிறந்து,திருவண்ணாமலைப் பகுதியில் பைத்தியம் போல், எது கொடுத்தாலும் சாப்பிடுவார்,ஒன்றும் சாப்பிடமாலும் இருப்பார்; எங்கு வேண்டுமானாலும் படுப்பார். இப்படி அலைந்து திரிந்து கொண்டிருந்தவரான சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றிய கதையையும் அவர்களுக்குப் பெரியவாள் சொன்னார்.அந்தத் தம்பதிகளைக் காட்டிலும், அந்த புத்திஸ்வாதீனமில்லாத பையன் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்ததை பெரியவாள் கவனித்தார்கள்.
“என்னிடம் பல பைத்தியங்கள் வந்திருக்கிறார்கள்.ஒருநாள் உங்களைப் போல் ஒரு தம்பதிகள், தங்கள் பிள்ளையுடன் வந்தார்கள்.- அந்தப் பையன், ஆறு மாதமாகப் பல் தேய்ப்பதில்லை,சாப்பிடுவதில்லை, துணிகளை மாற்றிக் கொள்வதில்லையாம். ஆனால் அவனுடைய வாய் நாற்றம் எடுப்பதில்லை. வேஷ்டியில் அழுக்கு ஏற்படுவதில்லை என்று சொன்னார்கள்.பிறகு கண்ணீர் வடிய, ‘அவன் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கும் போது, நாங்கள் சாப்பிடுவது மனத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’என்றார்கள் .”அவனால் ஏதாவது சிரமம் இருக்கா என்று நான் (பெரியவாள்) கேட்டேன். அதற்கு அவர்கள் உபத்ரம் ஏதுமில்லையென்றும், அவன் யாரிடமும் பேசுவதில்லை என்றும், எப்போதாவது,’ஸ்ரீராம சிவ’ என்று சொல்வான் என்றும் அப்பையனின் பெற்றோர் சொன்னார்கள்.”இவனும் ஒரு மகான் தான். நீங்கள் சாப்பிடும்போது, கொஞ்சம் சாதம்,குழம்பு ஆகியவைகளை,ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதுபோல், பையன் இருக்குமிடத்தில் வைத்துவிடுங்கள். அவன் சாப்பிடாவிட்டால்,சாயங்காலம் யாராவது ஏழைகளுக்குக் கொடுங்கள்” என்று சொன்னேன்.(பெரியவா)
கேட்டுக்கொண்டிருந்த தம்பதிகளையும்,பையனையும் பார்த்து ஸ்ரீ பெரியவா கூறியதாவது;
“வன்முறையில் ஈடுபடும் புத்திஸ்வாதீனமில்லாதவர்களுக்குத்தான் வைத்யம் தேவை.எவருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் பற்றி அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம் சொல்லப்போனால் அவர்கள். ஞானிகளாகலாம்.அவர்கள் கெடுதி செய்யமாட்டார்கள். பாபகார்யங்களைச் செய்யமாட்டார்கள்.அவர்களுக்குத் துவேஷம் கிடையாது.அவர்களைப் பார்க்கும்போது, நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்.” “நீ என்னப்பா சொல்கிறாய்?” ஏன்று சிரித்தபடி ஸ்ரீ பெரியவாள் தன் முன் உட்கார்ந்திருந்த அந்தப் பையனை நோக்கிக் கேட்டார்கள்.அந்தப் பையனும் சிரித்தான்
அந்தப் பையனின் பெற்றோர்கள்,ஸ்ரீ பெரியவர்கள், வெகு நேரம் பேசியதைக் கேட்டு, பையனைப் பற்றிய வருத்தமும், மனக்கவலையும் குறைந்தவர்களாக, தெளிவுடனும், மனச்சாந்தியும் அடைந்தவர்களக, விடைபெற்றுச் சென்றனர். அருகிலிருந்த பெரியவர்கள் பேசியதனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த நீண்ட பேச்சை மறக்கவே முடியாது.,.