
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த போது, அவர்களிடம் சசிகலா தரப்பு பேரம் பேசியது ஒரு வீடியோ மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனிடம் தனிப்பட்ட முறையில் பேரம் பேசும் வீடியோவை டைம்ஸ் நவ் சேனல் தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் மூன் பத்திரிக்கை இணைந்து வெளியிட்ட செய்தியின் படி, சொந்த ஊரிலிருந்து சென்னை வந்த எம்.எல்.ஏக்களை விமான நிலையத்திலேயே மடக்கிய சசிகலா தரப்பு அவர்களை அங்கிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவர்களிடம் ரூ.2 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்பின், அவர்களை பேருந்து மூலம் அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ரூ.4 கோடி தருவதாக கூறியுள்ளனர். அதன் பின் அவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது ரூ.6 கோடி வரை தருவதாக சசிகலா தரப்பு பேரம் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் பணமாகத் திரட்ட முடியாது என்பதால் பலருக்கு தங்கமாகவும் தர முன் வந்தனர் என்றும், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ தமீன் அன்சாரி, கொங்குநாடு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ தனியரசு மற்றும் முக்கலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ ஆகியோருக்கு ரூ.10 கோடி வரை தருவதாக பேரம் பேசப்பட்டது என்றும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



