
விசாரணை ஏதுமின்றி, கோயிலை இடிக்க முன் நிற்போம், யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் வழக்கு போடுவோம் என்று மிரட்டுவோம், ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தால், கைது செய்வோம் என்று தென்காசி மாவட்ட காவல் துறையினர் செயல்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் கூறுகின்றனர்.
இன்று, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் மற்றும் அழகப்பபுரம் பகுதிகளில் இரண்டு கோவில்களை இடிக்க உத்தரவிட்ட தென்காசி ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் அந்த இரண்டு கோவில்களையும் அரசு செலவில் கட்டித்தர வலியுறுத்தியும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்காகச் செல்லும் இந்து முன்னணி அமைப்பினரை திசை திருப்பி, ஒன்று கூடாமல் செய்வதற்காக, இந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப் பட்டு விட்டதாகவும், வேண்டுமானால் தலைமைக்கு போன் பண்ணி கேட்டுக்குங்க என்றும் உளவுப் பிரிவு போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளை குழப்பி விட்டதாகவும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இன்று காலை இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் முன், இந்து முன்னணி அமைப்பினர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி, செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது போல், ஆங்காங்கே இந்து முன்னணியினரை கைது செய்து தென்காசி ஆட்சியரகம் நோக்கிச் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். தென்காசி நகரில் போலீஸார் பெருமளவில் குவிக்கப் பட்டு, பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டு வருகிறது. இதனால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த இந்து முன்னணி தொண்டர்களை பகுதி பகுதியாக தென்காசி இலஞ்சி முனை பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியும் தென்காசி ஆட்சியர் அலுவலகம் நோக்கி வரும் மற்ற பாதைகளிலும் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர் போலீஸார்.

இருப்பினும், தென்காசியில் தடைகளை மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திய மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்டத்தலைவர் ஆறுமுகச்சாமி, வக்கீல் அணி மாவட்ட தலைவர் சாக்ரட்டீஸ் உட்பட 53 பேர் கைது செய்யப் பட்டனர்.
இதனிடையே, நீல நிற டீசர்ட் அணிந்து குடி போதையில் வந்த குற்றப்பிரிவு காவலர் ஒருவர், இந்துமுன்னணி தொண்டர்களிடம் அசிங்கமாக பேசி தரக்குறைவாக நடந்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், இந்த முற்றுகைப் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களைச் சந்திக்க விடாமல் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து காவல்துறை அராஜகம் செய்ததாகவும் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் தெரிவித்தார்.
இந்து முன்னணியினர் 53 பேர் கைது செய்யப்பட்டு தென்காசி சிவா கல்யாண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்க வந்த இந்து முன்னணி தொண்டர்கள் வரும்வழியில் செங்கோட்டை, கடையம் , கடையநல்லூர் ,சேர்ந்தமரம் என மாவட்டம் முழுக்க. பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர்!